போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் - இஸ்ரேல் தாக்குதல் : 47 பேர் பலி
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் ஹமாசுக்ம் இடையே இரண்டு ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் எகிப்தில் உள்ள ஷர்ம் எல் ஷேக்கில் அதிபர் டிரம்ப் பங்கேற்ற மாநாட்டின் போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஹமாஸ் நேற்று முன்தினம் ஒப்படைத்த ஒரு பணய கைதியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அந்த பணய கைதியின் பெயர் தல் ஹைமி(42). கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி காசா எல்லையில் இருந்த தல் ஹைமியை சுட்டு கொன்ற பின்னர் அவரது உடலை ஹமாஸ் படையினர் காசாவுக்கு கொண்டு சென்றனர். ஹமாஸ் இதுவரை 13 பேரின் உடல்களை ஒப்படைத்துள்ளது. அவர்களின் பிடியில் இன்னும் 15 உடல்கள் இருக்கின்றன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் படையை சேர்ந்த தலைமை நிர்வாகி கலீல் அல் ஹய்யா கெய்ரோவில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ இஸ்ரேலுடன் மேற்கொண்ட அமைதி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஹமாஸ் உறுதியாக இருக்கிறது’’ என்றார்.
நேற்று முன்தினம் இஸ்ரேல் ராணுவத்தின் மீது ஹமாஸ் படையினர் துப்பாக்கிசூடு நடத்தியதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் பதிலுக்கு இஸ்ரேல் தாக்கியதில் 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 80 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனனர். இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு தரப்பினரும் மோதி வரும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணித்து இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நேற்று டெல் அவிவ் வந்தார்.