மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் சிசிடிவி கேமரா, போலீஸ் பூத் அமைக்கப்படுமா?: சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
திருப்போரூர்: மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா, போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் மேலக்கோட்டையூர் உள்ளது. இங்கு, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், ஐஐஐடி கல்வி நிறுவனம், போலீஸ் குடியிருப்பு, உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம், வெல்டிங் ராடு தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை உள்ளன.
இதுமட்டுமின்றி கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், வேங்கடமங்கலம், இரத்தினமங்கலம் போன்ற கிராமங்களில் வசிப்பவர்கள் தங்களுக்கு தேவையான மளிகை, மருந்து, ஜவுளி போன்றவற்றை வாங்க மேலக்கோட்டையூர் மற்றும் கண்டிகை சந்திப்பு பகுதிக்கு வருகின்றனர்.
இதன் காரணமாக, இப்பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உருவாகி உள்ளன. அதிகமாக மக்கள் வருகை தருவதால் சாலைகளிலும், கடைகளிலும் எப்போதும் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இதை, பயன்படுத்தி சமூக விரோதிகள் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, பணம் திருட்டு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். மேலும், இப்பகுதியில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலத்த காயம் மற்றும் இறப்பு போன்றவை நடக்கிறது. இந்த, விபத்துகளில் ஏற்படும் வாகனங்கள் முறையான புகார் இன்றி சென்று விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதில் பின்னடைவு ஏற்படுகிறது. ஆகவே மேலக்கோட்டையூர், இராஜீவ்காந்தி நகர், வண்டலூர் சாலை, வேங்கடமங்கலம் சாலை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றும், போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.