கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணையால் எந்த பயனும் இல்லை: சீமான் பேட்டி
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதால் எந்த பயனும் ஏற்படாது என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்பதில்லை. மாநில உரிமை, தன்னாட்சிக்கு எதிரானது.
அதனை எப்போதும் ஒரு அவமானமாக நான் பார்க்கிறேன். எங்கள் காவல்துறை விசாரணையில் என்ன குறை? சிபிஐ அதிகாரிகளுக்கு இரண்டு மூளை இருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் சிபிஐ விசாரித்து நிரூபித்த பெரிய வழக்கு எதாவது இருக்கிறதா? நீதிமன்றங்கள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் துறை, மத்திய புலனாய்வுத் துறை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
அது ஆட்சியாளர்களின் 5 விரல்களைப் போன்றது. சிபிஐ விசாரணையில் என்ன கிடைக்கப் போகிறது. சிறந்த தமிழ்நாடு காவல்துறையை அவமதிக்கிறார்கள். சிபிஐ விசாரணையால் எந்த பயனும் இல்லை. கரூர் விவகாரத்தில் விசாரணை தொடங்கவே இல்லை. அதற்குள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.