ரூ.3,000 கோடி கடன்பெற்று மோசடி அனில் அம்பானி நிறுவனத்தில் சிபிஐ திடீர் சோதனை
மும்பை: யெஸ் வங்கியிடம் இருந்து ரூ.3000 கோடி கடன்பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் மும்பையில் உள்ள அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தி வருகிறது. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. ரிலையஸ் கம்யுனிகேஷன் உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த 2017 -2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் யெஸ் வங்கியில் இருந்து சுமார் ரூ.3,000 கோடி கடன் பெற்றுள்ளார். இந்த பணத்தை சட்டவிரோதமாக அந்தக் குழுமத்தின் பல நிறுவனங்கள், போலி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்க யெஸ் வங்கி பல வீதிமிறல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த கடனை அனில் அம்பானிக்கு வழங்க அந்த வங்கியின் நிறுவனர்களுக்கு முறைகேடாகப் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், சிபிஐயின் வழக்கை அடிப்படையாக கொண்டு சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதையடுத்து, அனில் அம்பானிக்கு சொந்தமான 35 இடங்கள், 50 நிறுவனங்களில் சோதனையும் நடத்தி அதிரடி காட்டியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த முறைகேடு குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தநிலையில், மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ இன்று பிற்பகலில் திடீர் சோதனையை நடத்தியது. பல மணி நேரமாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையை தொடர்ந்து சிபிஐயும் இந்த வழக்கில் சோதனை நடத்தி இருப்பது அனில் அம்பானிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.