தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் நாளை கரூர் வருகை: விசாரணை சூடுபிடிக்க வாய்ப்பு
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி குஜராத் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் கடந்த 17ம் தேதி அதிகாலை கரூர் வந்தனர். இந்த குழுவினரிடம் எஸ்ஐடி குழுவினர் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தனர்.
கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் முகாமிட்டு இருந்த சிபிஐ குழுவினர், 18ம் தேதி மாலை சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்திற்கு காரில் வந்தனர். 5 நிமிடம் காருக்குள் இருந்தபடியே அந்த இடத்தை பார்வையிட்டதோடு யாரிடமும் விசாரிக்காமல் பயணியர் விடுதிக்கு சென்றனர்.
பின்னர் பயணியர் விடுதியில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலரை வரவழைத்து விசாரித்தனர். இந்நிலையில் தீபாவளியை கொண்டாட சிபிஐ அதிகாரிகள், கடந்த 19ம் தேதி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் இன்று இரவு அல்லது நாளை காலை கரூர் வர இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின் வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.