காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி இயல்பை விட 13 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக மேற்கொள்ளப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
சென்னை: வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி 2.64 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே வேளையில் 5.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, குறுவை பருவத்தில் அதிகப் பரப்பில் நெல்சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாலும், சாதகமான சூழ்நிலை நிலவியதால் இயல்பாக சம்பா பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், குறுவை சாகுபடி மேற்கொண்டதாலும், தற்போதுவரை குறுவை நெல் அறுவடை 52 சதவீதம் மட்டுமே செய்யப்பட்டிருப்பதாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர் மழை இருப்பதாலும் சம்பா நெல் சாகுபடி தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பான 6.13 லட்சம் ஏக்கரில் 80 சதவீத பரப்பில் தாளடி பருவ நெல் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது 5,438 ஏக்கரில் நெல் நாற்றங்கால் தயார் நிலையில் உள்ளதாலும், மேட்டூர் அணையில் பாசனத்திற்கு போதிய நீர் இருப்பு (83.14 டி.எம்.சி) உள்ளதாலும் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி இயல்பு பரப்பான 13 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே,விதை தேவைக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு, அருகில் இருக்கும் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.