எச்சரிக்கை தேவை
பீகார் சட்டசபை தேர்தல், நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, அம்மாநிலத்தில் தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிகளவில் நீக்கப்பட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார்கள் தெரிவித்தன.
தேர்தல் ஆணையத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. அப்போது மக்கள் தெளிவு பெறவும், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாகவும் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேவை. மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் ஆதார் அட்டையையும் அடையாள ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2வது கட்டமாக 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்ள, இந்திய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நேற்று முறைப்படி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ஆளுங்கட்சி தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சேர்க்கைக்கு பிறப்பு சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. பல ஏழை குடியிருப்பாளர்களுக்கு ஆவணங்கள் இல்லாததால், இது வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் அனைவரும் வாக்கு செலுத்த முடியுமா என்ற அபாயம் உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திள்ளது. இது தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) பின்கதவு வழியாக அறிமுகப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்ற கவலைகள் எழுந்துள்ளன.
கடந்த 2003ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ஆணையம் மேற்கொண்டது. தற்போது விரிவான திருத்தத்தை மேற்கொள்ள ஏன் ஆணையம் அவசரம் காட்டுகிறது என்ற கேள்வி எழுகிறது? இந்த முயற்சியை கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பீகாரில் செயல்படுத்தியிருக்கலாம். சரியான திட்டமிடல் இருந்திருந்தால், நாடு தழுவிய அளவில் கூட இதை நடத்தியிருக்கலாம் என மாநில மற்றும் தேசிய கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை SIR மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பாஜவும், அதன் கூட்டாளியுமான அதிமுகவும் வெற்றி பெற்றுவிடலாம் என கணக்கு போடுகிறார்கள். மக்களின் வாக்குரிமையை பறிக்கும் SIR செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கடமையாற்ற வேண்டும். மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் காக்கின்ற திமுக ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனியாது என கூறியுள்ளார்.
பீகார் போன்று தமிழகத்தில் SIR மூலம் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில் இங்குள்ள மக்கள் விழிப்புணர்வு நிறைந்தவர்கள். இதனால் SIR நடவடிக்கைகளில் மிகுந்த கவனமும், எச்சரிக்கையுடன் அனைத்து கட்சியினரும், மக்களும் இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பணிகள் வாக்காளர்களுக்கு வசதியாகவும், சிரமத்தை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.