பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை : தொடர் மழையால் மாடுகள் வரத்து குறைந்தது
வேலூர்: தொடர் மழை எதிரொலியாக பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனை மந்தநிலையில் இருந்ததால் வர்த்தகத்திலும் சரிவு கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைகளில் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை புகழ்பெற்றதாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இச்சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் உள்ளூர் நாட்டு கறவை மாடுகள், கலப்பின கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக இங்கு கறவை மாடு ₹50 ஆயிரம் முதல் ₹2 லட்சம் வரை அதன் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் காளைகள், உழவு மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கால்நடைகள் மட்டுமின்றி அதோடு இணைந்த காய்கறி சந்தையும் இங்கு நடக்கிறது. சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ₹65 லட்சம் முதல் ₹1.20 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தீவன பற்றாக்குறை இருக்காது என்பதால் கால்நடைகளை பெரும்பாலும் விற்பதற்கு முன்வர மாட்டார்கள். இதனால் கடந்த 2 வாரமாக விற்பனை மந்த நிலையில் இருந்து வருகிறது. தற்போது மழை தீவிரமடைந்துள்ளதால் கால்நடைகளை கொண்டு வருவதில் நடைமுறை சிக்கலுடன், தீவனத்துக்கும் பற்றாக்குறை என்பது இருக்காது என்பதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருவதால் வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டு வரும் விவசாயிகள் வரவில்லை. மாடுகள் வாங்கவும் பெரிய அளவில் விவசாயிகள் வரவில்ைல. தற்போது மழைசீசன் என்பதால் விற்பனை மந்தமாக உள்ளது. தீவனம் தட்டுப்பாடு இருக்காது என்பதால் வியாபாரிகளும் விற்பனை செய்ய முன்வரவில்லை. இதனால் குறைந்த அளவில் மட்டுமே மாடுகள் வந்துள்ளது. வியாபாரமும் ரூ.50 லட்சத்துக்கு குறைவாகத்தான் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.