தொடர் மழை எதிரொலி: பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து சரிவு
வேலூர்: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும். அதன்படி இன்று நடந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக உள்ளூர் நாட்டு கறவை மாடுகள், கலப்பின கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. வடமேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தீவன பற்றாக்குறை இருக்காது என்பதால் கால்நடைகளை பெரும்பாலும் விற்பதற்கு முன்வர மாட்டார்கள்.
இதனால் கடந்த வாரமே விற்பனை ரூ.75 லட்சமாக இருந்தது. தற்போது மழை மேலும் தீவிரமடைந்துள்ளதால் கால்நடைகளை கொண்டு வருவதில் நடைமுறை சிக்கலுடன், தீவனத்துக்கும் பற்றாக்குறை என்பது இருக்காது என்பதால் இன்று பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து நூற்றுக்கணக்கில் மட்டுமே இருந்தது. இதனால் விற்பனையும் ரூ.35 லட்சத்துக்கு சரிந்தது. இதுதொடர்பாக கால்நடை வியாபாரிகள் கூறும்போது, ‘தொடர் மழையின் காரணமாக கால்நடைகளின் வரத்தில் இன்று சொல்லிக்கொள்ளும்படி ஏதும் இல்லை. அதனால் விற்பனையும் திருப்தியாக இல்லை’ என்றனர்.