காங்கிரசும், ஆர்ஜேடியும் சாதி அரசியல் செய்கின்றன: பிரதமர் மோடி கடும் தாக்கு
மோதிஹரி: பீகாரில் கிழக்கு சம்பாரண் மாவட்டம் மோதிஹரியில் நேற்று நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ரூ.72,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, “ காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் பீகாரின் வளர்ச்சியில் மிகப்பெரிய இடைவௌி இருந்தது. இரண்டு கட்சிகளும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை பற்றி சிந்திக்கவில்லை.
ஆர்ஜேடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை தருவதற்கு முன்பாகவே ஏழைகளின் நிலங்களை அபகரித்து கொண்டது. காங்கிரசும், ஆர்ஜேடியும் ஏழைகள், சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றன” என குற்றம்சாட்டினார்.
‘வங்காளிகளை பாதுகாப்பது பாஜ மட்டுமே’
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பலகோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “வங்க மொழி பேசும் மக்களை பாஜ துன்புறுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் சொல்வது பொய் குற்றச்சாட்டு. பாஜ அரசு எங்கிருந்தாலும் அங்கு வங்காளிகள் மதிக்கப்படுகிறார்கள். உண்மையிலேயே வங்காளிகளை மதித்து, பாதுகாப்பது பாஜ மட்டுமே. மேற்குவங்கத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை விலையாக கொடுத்து திரிணாமுல் ஆட்சி செய்து வருகிறது. அங்கு ஊடுவருவல்காரர்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் செயல்படுகிறது. மேற்குவங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என இவ்வாறு பேசினார்.