இனி வரும் காலங்களில் எந்த பெயரும் சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் முடிவு: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
சென்னை: இனி வரும் காங்களில் எந்த பெயரும் ஜாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சாதி பெயர்களை பயன்படுத்த கூடாது அவற்றை நீக்க வேண்டும் என்ற அரசாணையை விசிக மனப்பூர்வமாக வரவேற்கிறது.
சில சாதிகளின் பெயர்களில் ‘ன்’ விகுதிகளை ‘ர்’ விகுதியாக மாற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும் அதனை சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் வேலைக்காக பல்லாயிரக்கணக்காக காத்துக்கொண்டு உள்ளனர். அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள் சாதிப் பெயர்களுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர்கள் கொண்டிருந்த அடையாளத்தை பின்பற்றுவதால் சாதியை வளர்க்கிறோம் என்று ஆகாது. கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை ‘ஜி.டி பாலம்’ என்று பெயர் வைத்து புதிய தலைமுறையிடம் கொண்டு போய் சேர்த்தால் மகிழ்ச்சி தான்.
ஆனால் ‘ஜி.டி.நாயுடு பாலம்’ என்ற பெயரில்தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்று அரசு ஒரு முடிவை எடுத்திருப்பதால், அது சாதியை வளர்ப்பதற்கானதாக இருக்காது. இனி வரும் காலங்களில் எந்த பெயரும் ஜாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு இவ்வாறு அவர் கூறினார்.