தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சாதிவாரி கணக்கெடுப்புடன் 2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு: தேதியை அறிவித்தது ஒன்றிய அரசு

புதுடெல்லி: 2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் சாதிவாரி கணக்கெடுப்புடன் 2 கட்டமாக நடத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, லடாக் உள்ளிட்ட பனிப் பகுதிகளில் 2026 அக்டோபர் 1ம் தேதியும், நாட்டின் பிற பகுதிகளில் 2027 மார்ச் 1ம் தேதி 2ம் கட்டமாகவும் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை கடந்த 2019ல் ஒப்புதல் வழங்கியது. அதன்படி, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் தேசிய மக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் 2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக இப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த 5 ஆண்டாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படாததால் ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்தன. மேலும், கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி தீவிர பிரசாரம் செய்தார்.

அது காங்கிரசுக்கு பெரிய அளவில் பலன் தந்தது. இக்கருத்தை பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. கர்நாடகா, பீகார், தெலங்கானாவில் மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தின. மேலும் பல மாநிலங்களும் இதற்கான முயற்சிகளை எடுத்தன. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒன்றிய பாஜ அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த பரபரப்பான சூழலில், ஏப்ரல் 30ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூடியது. அதில், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்புடன் 2 கட்டமாக நடத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், ‘லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பனிப்பொழிவு பகுதிகளில் அக்டோபர் 1, 2026 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும். அதைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளில் 2027 மார்ச் 1ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3ன்படி 16.6.2025 (தோராயமாக) அன்று அரசிதழ் வெளியிடப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பானது, 1948 மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் மற்றும் 1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட அனைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் சாதிகள் சேர்க்கப்படவில்லை. 1951ம் ஆண்டிலிருந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு, பட்டியலின சாதியினர், பட்டியலின பழங்குடியினர், இந்து, முஸ்லிம் போன்ற மத அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது.

சுதந்திரத்திற்கு முன்பு 1931ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டன. எனவே தற்போது நம்மிடம் இருக்கும் சாதிவாரி தரவுகள் 1931ம் ஆண்டில் எடுக்கப்பட்டவை. தற்போது முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

செலவு ரூ.13,000 கோடி; ஒதுக்கீடு ரூ.575 கோடி

கடந்த 2019 டிசம்பர் 24ல் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை ரூ.8,754.23 கோடி செலவில் நடத்தவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை ரூ.3,941.35 கோடி செலவில் புதுப்பிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வுக்கு ரூ.574.80 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. நிதி சிறிய பிரச்னை என்றும், அதை எந்த தடையும் இல்லாமல் தீர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்முறை மக்கள்தொகை கணக்கெடுப்புடன், தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்படுமா என்பது குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை.

தொகுதி மறுவரையறை செய்யப்படுமா?

ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்ய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. கடந்த 1975ல் மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால், மக்கள்தொகை நிலை பெறும் வரை 25 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2001ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுக்கு ஒத்திவைத்தார். இதன்படி, 2026க்குப் பிறகு எடுக்கப்படும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். எனவே 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவ்வாறு மறுவரையறை செய்யும் பட்சத்தில் மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் 8 மக்களவை தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. தற்போது 39 தொகுதிகள் உள்ளன.

* 2027ல் நடத்தப்பட இருப்பது இந்தியாவின் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு

* 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகை 121.019 கோடி. இதில் 62.372 கோடி பேர் (51.54%) ஆண்கள், 58.646 கோடி பேர் (48.46%) பெண்கள்.

* வீடு வீடாக சென்ற மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த 30 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு 100 தேசிய பயிற்சியாளர்கள், 1,800 முதன்மை பயிற்சியாளர்கள், 45,000 களப்பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பார்கள்.

எப்போது முடியும்?

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பாக இருக்கும் என்றும் பொதுமக்கள் அவர்களே தங்கள் தகவல்களை பதிவிடும் வகையில் வசதிகள் செய்யப்படும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதனால் கணக்கெடுப்பு பணிகள் முந்தைய காலங்களை விட விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?

நாட்டின் பல பகுதிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு இன்னும் உள்ளது. இதனால், பல சமூகத்தினரும் சமூகம், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பின் தங்கியுள்ளனர். அவர்களுக்கான வளர்ச்சியை உறுதிபடுத்தவும், அவர்களுக்கான அரசு திட்டங்களை வடிவமைக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. ஓ.பி.சி. மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுகள் போன்றவற்றில் சம வாய்ப்பை உறுதி செய்யவும் சாதிவாரி கணக்கெடுப்பு உதவும்.

23 மாதம் தாமதம் ஏன்?

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று விடுத்த எக்ஸ் பதிவில், ‘‘2021ல் நடக்க இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை இன்னும் 23 மாதங்களுக்கு தாமதப்படுத்த உண்மையில் எந்த காரணமும் இல்லை. மோடி அரசு தலைப்புச் செய்திகளை மட்டுமே உருவாக்க முடியும், காலக்கெடுவை பூர்த்தி செய்ய முடியாது’’ என்றார்.