இபிஎஸ் பரப்புரையின்போது சென்ற ஆம்புலன்ஸை தடுத்த விவகாரம்; 5 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னை: வேலூர் அணைக்கட்டு பகுதியில் இபிஎஸ் பரப்புரையின்போது சென்ற ஆம்புலன்ஸை தடுத்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் சுரேந்திரன் அளித்த புகாரின்படி அடையாளம் தெரியாத 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 18ம் தேதி வேலூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்தபோது, 108 ஆம்புலன்ஸ் ஒன்று அவ்வழியே வந்துள்ளது. அப்போது அதிமுக கூட்டங்களில் நெரிசலை ஏற்படுத்தும் வகையில் ஆம்பூலன்ஸ் வருவதாக குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முன்னேற்ற சங்கம் அதன் சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டி அச்சுறுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், முதலில் இபிஎஸ் பொதுக்கூட்டத்தில் மிரட்டும் வகையில் பேசிய பிறகு தான் அங்கிருந்த அதிமுகவினர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அச்சுறுத்தும் வகையில் மிரட்டி இருக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “ஆம்புலன்ஸ் ஒட்டுனரின் ஐ.டி கார்டு முதலியவற்றை பிடித்து இழுத்து, ஆம்புலன்ஸ் வண்டி அங்கிருந்து செல்லாத வகையிலும் செயல்பட்டுள்ளனர். மக்களுக்கான உன்னதமான இரவு பகல் பாராமல் உதவி வரும் எங்களைப் போன்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இதுபோன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே தமிழ்நாடு மருத்துவத்துறை சார்ந்த நபர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இபிஎஸ் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வழியாக இயக்கினால் ஊழியர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே தமிழக காவல்துறை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். மேலும், எடப்பாடி பழனிச்சாமி இந்த செயலுக்கு பொதுமக்களிடையே பொது மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.