கரூர் சம்பவத்தை தொடர்ந்து நாமக்கல்லில் புஸ்ஸி ஆனந்த் உள்பட 3 நிர்வாகிகள் மீது வழக்கு: போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக போலீசார் நடவடிக்கை
நாமக்கல்: நாமக்கல்லில், பொதுபோக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விதமாக செயல்பட்டதாக, தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட நிர்வாகிகள் 3 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி, மூச்சுதிணறல் ஏற்பட்டதில், 30 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 4பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாமக்கல்லில் விஜய் பிரசார கூட்டத்தையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 20 விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என தவெக கட்சியினருக்கு போலீசார் நிபந்தனைகள் விதித்திருந்தனர்.
ஆனால் போலீசார் கூறிய எந்த விதிமுறைகளையும் தவெக கட்சியினர் பின்பற்றவில்லை. இதனால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு திறந்தவெளிகள் சட்டப்படி, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக மாவட்ட செயலாளர் சதீஸ், கட்சியின் இணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் சம்பவத்தை தொடர்ந்து நாமக்கல்லிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.