மதுரை தவெக மாநாட்டில் தூக்கி வீசியதாக தொண்டர் புகார்: விஜய் மீதான வழக்கு மதுரைக்கு மாற்றம்
மதுரை: தவெக தலைவர் விஜய் மீது பெரம்பலூர் குன்னத்தில் பதியப்பட்ட வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை தவெக மாநாட்டில் தன்னை தூக்கி வீசியதாக தொண்டர் அளித்த புகாரின்பேரில் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பாதுகாப்பு குண்டர்கள் 10 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரியம்மா பாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார் (24). விஜய் ரசிகரும் தவெக தொண்டருமான இவர், தாய் சந்தோஷத்துடன் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், ஏடிஎஸ்பி பாலமுருகனிடம் நேற்று ஒரு புகார் அளித்தார்.
அதில் கூறியதாவது: பெரியம்மாபாளையத்தில் எனது தாய், பாட்டி, தங்கையுடன் வசித்து வருகிறேன். தவெக மதுரை மாநாட்டிற்கு கடந்த 21ம் தேதி சென்றிருந்தேன். மாநாட்டில் முன் வரிசையில் கட்சி தலைவர் விஜய் நடந்து வரும் பாதை (ரேம்ப் வாக்) அருகில்நின்று கொண்டிருந்தபோது, விஜய் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் ஏறினேன். ஆனால் விஜய்யின் பவுன்சர்கள் என்னை அலேக்காக தூக்கி வீசினர். இதில் எனது மார்பகம், வலது விலா எலும்பு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. இதனால் எனக்கு உடல் வலி அதிகமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்.
இதுகுறித்து கட்சி தலைமை பேசுவதாக கூறி, என்னிடம் தவெக பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் வந்து பேசினர். ஆனால் யாரும் என்னை நேரில் வந்து பார்க்க வரவில்லை. என்னை கட்சிக்கு எதிராக பேசாமல் பார்த்து கொண்டார்களே தவிர, எனக்கு எந்தவிதமான முதலுதவியும் அளிக்க முன்வரவில்லை. தற்போது நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வருகிறேன். எனவே விஜய் மீதும், பாதுகாப்பு குண்டர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். கலெக்டர் அலுவலகம், குன்னம் காவல் நிலையத்திலும் சரத்குமார் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் குன்னம் இன்ஸ்பெக்டர் கண்ணன், தவெக தலைவர் விஜய் மற்றும் பாதுகாப்பு குண்டர்கள் 10 பேர் மீதும் பிரிவு 115(2)-10 பேர் கொண்ட கும்பல் கையால் தாக்குதல், 296(பி)- அசிங்கமாக, தரக்குறைவாக திட்டுதல், 189(2) 5, 6 பேருக்கு மேல் கூட்டமாக நிற்பது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நேற்றிரவு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், விஜய் மற்றும் பவுன்சர்கள் மீதான இந்த வழக்கு குன்னம் காவல் நிலையத்திலிருந்து மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணைக்காக கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.