கொலை வழக்கில் 75 ஆண்டு சிறை தண்டனை 16 ஆண்டில் விடுதலையான ‘ராப்’ பாடகர்: நண்பர்கள் உற்சாக வரவேற்பு
நெவார்க்: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரபல அமெரிக்க ராப் பாடகர் மேக்ஸ் பி, 16 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஹார்லெம் பகுதியைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் சார்லி விங்கேட், தனது மேடைப் பெயரான ‘மேக்ஸ் பி’ மூலம் பரவலாக அறியப்பட்டவர். கடந்த 2006ம் ஆண்டு நடந்த ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம் ஒன்றில் இவருக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், கடந்த 2009ம் ஆண்டு மேக்ஸ் பி-க்கு 75 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டில், அவரது முந்தைய வழக்கறிஞருக்கு இந்த வழக்கில் முரண்பாடுகள் இருந்தது நிரூபிக்கப்பட்டதால், 2016ம் ஆண்டு அந்தத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. பின்னர், அவர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவரது தண்டனை 20 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், குறைக்கப்பட்ட தண்டனைக் காலம் முடிவடைந்ததை அடுத்து, நியூ ஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரில் உள்ள வடக்கு மாநில சிறையிலிருந்து மேக்ஸ் பி நேற்று விடுதலை செய்யப்பட்டார். 16 ஆண்டு கால சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த அவரை, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ராப் பாடகரான ஃப்ரெஞ்ச் மொன்டானா ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். தற்செயலாக ஃப்ரெஞ்ச் மொன்டானாவின் 41வது பிறந்தநாளன்றே இந்த விடுதலை நிகழ்ந்துள்ளதால், அனைவரும் பாராட்டினர்.