ரூ.5 கோடி கேட்டு பெண் டாக்டரிடம் டார்ச்சர்: கணவர் மீது வழக்கு
புதுச்சேரி: பெண் டாக்டரிடம் ரூ.5 கோடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக டாக்டர் கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி திருவண்டார்கோவிலை சேர்ந்தவர் சக்தி ஞானவேல். இவரது மகள் டாக்டர் ரூபஸ்ரீ (29). இவருக்கும், சிதம்பரத்தை சேர்ந்த டாக்டர் லட்சுமி நாராயணன் என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரூபஸ்ரீக்கு அவரது பெற்றோர் 55 சவரன் நகை, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். லட்சுமி நாராயணன்-ரூபஸ்ரீ தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ரூபஸ்ரீயின் தந்தை சக்தி ஞானவேலுவிடம் ஒரு இடம் வாங்குவதற்காக ரூ.2 கோடி வேண்டும் என ேகட்டு லட்சுமி நாராயணன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வரதரட்சணை போதவில்லை இன்னும் வாங்கி வரவேண்டும் என்றும் சிதம்பரத்தில் புதிதாக மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.5 கோடி வாங்கி தரக்கோரி ரூபஸ்ரீயை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ரூபஸ்ரீ மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரூபஸ்ரீயை அவரது தாய் வீட்டுக்கு லட்சுமி நாராயணன் மற்றும் அவரது பெற்றோர் அனுப்பி விட்டனர். அப்போது வரதட்சணையாக கொடுத்த நகைகளை திருப்பி கேட்டபோது ரூபஸ்ரீக்கு, மாப்பிள்ளை வீட்டார் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ரூபஸ்ரீ வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.