பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறை பகுதியில் ஏலக்காய் செடி நடவுப் பணி தீவிரம்: புத்துயிர் பெறும் ‘நறுமணங்களின் ராணி’ சாகுபடி
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே, பெரும்பாறை மலைப் பகுதியில் ஏலக்காய் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. நறுமணங்களின் ராணி என அழைக்கப்படும் ஏலக்காய் சாகுபடி மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, தாண்டிக்குடி, கும்பம்மாள்பட்டி, நல்லூர்காடு, கே.சி.பட்டி, கவியக்காடு, ஆடலூர், பன்றிமலை ஆகிய மலைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தாண்டிக்குடியை மையமாகக் கொண்டு ஏலக்காய் ஆராய்ச்சி நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால், ஏலக்காய் சாகுபடி புத்துணர்வு பெற தொடங்கியுள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மலைத்தோட்டங்களில் மிளகுகொடிகளுடன், ஏலக்காய் செடியும் நடவு செய்து வருகின்றனர்.
ஏலக்காய் ‘நறுமணப் பொருட்களின் ராணி’ என அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் அதனுடைய தனிப்பட்ட சுவை மற்றும் மணமாகும். உலகில் விலை உயர்ந்த மசாலா பொருட்களில் வெனிலா மற்றும் குங்குமப்பூவிற்கு அடுத்தபடியாக 3வது இடத்தைப் பிடித்துள்ளது. நமது நாட்டில் பாரம்பரிய உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து ஏலக்காய் விவசாயிகள் கூறுகையில், ‘ஏலக்காய் செடி 4 மீட்டர் உயரம் வளரும். இதன் இலை 30 முதல் 60 செ.மீ நீளம், 5 முதல் 15 செ.மீ அகலம் கொண்ட அடர்பச்சை நிறத்தில் இருக்கும். இதில், இளம்பச்சை நிறம் கொண்ட இருபால் தன்மை கொண்ட மலர்கள் பூக்கும். ஏலக்காய் செடி அதிக சூரிய ஒளியை தாங்கி வளராது. ஆனால், மிதமான சூரிய ஒளி தேவைப்படும்.
லேசான அமிலத்தன்மை கொண்ட வளமான நல்ல தண்ணீர் வடிதிறன் கொண்ட மண்ணில் செழித்து வளரும். இதனால், மலைப்பகுதிகளில் செடிகளை நடவு செய்கிறோம். தற்போது மிளகு கொடிகளுக்கிடையே ஊடுபயிராக ஏலக்காய் நடவு செய்கிறோம். இதனால், எங்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.
2 ஆயிரம் ஆண்டு பழமையான சாகுபடி
ஏலக்காய் முதன்முதலில் தென்னிந்தியாவின் மழைக்காடுகளில் கண்டறியப்பட்டு நமது நாட்டில் அதிகம் பயிரிடப்படுகிறது. இதேபோல இலங்கை, கௌதமாலா ஆகிய நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஏலக்காய் வியாபாரம் நடந்து வருகிறது. கிமு 4ம் நூற்றாண்டில் கிரேக்கம் மற்றும் ரோமிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஏலக்காயில் உள்ள சத்துகள்
ஏலக்காயில் வைட்டமின் சி, பி-1, பி-2. பி-3, பி-6 ஆகிய சத்துகள் உள்ளன. தாது உப்புக்களான மாங்கனீசு அதிமாக உள்ளது. மேலும், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், செம்புச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ், பொட்டாசியம், அதிக நார்ச்சத்து கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்தும் உள்ளது.
மருத்துவப் பயன்கள்
ஏலக்காயில் உள்ள ஆண்டிமைக்ரோபில் தன்மையானது வாய் துர்நாற்றத்திற்கு காரணமான ஸ்டெப்டோகாக்கஸ் முட்டான் மற்றும் கான்டிடா அல்பிகான் பாக்டீரியாக்களை அழித்து சுவாச புத்துணர்வு அளிக்கிறது. இயற்கையாகவே ஏலக்காய் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. ஏலக்காய் புற்றுநோய் வராமல் தடுக்கவும், தள்ளிப்போடவும், புற்றுநோய் உருவாகாமல் தடுக்கவும் செய்கிறது. ஏலக்காயில் உள்ள பொருட்கள் மன அழுத்தைத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மன அமைதிக்காக ஏலக்காய் டீ குடிக்கும் வழக்கம் ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆயுர்வேதம், சீன மற்றும் யுனானி மருத்துவத்தில் வயிற்று பிரச்னைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயை உண்ணும்போது நுரையீரலுக்கு அதிக ரத்த ஓட்டத்தை செலுத்தி சுவாச பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது. எனவே, சுவாச பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் சாப்பிடலாம். ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து தண்ணீரில் காய்ச்சி குடித்தால் தொண்டை கட்டிக்கு தீர்வாக அமையும். இதற்கு ஏலக்காயில் உள்ள ஆண்டி ஆக்சிடண்டுகள் காரணமாகும். இவ்வாறு இதில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளன.