அண்ணாநகர் 6வது அவென்யூவில் மரம் விழுந்து கார் சேதம்: ஐஏஎஸ் பயிற்சி பெண் தப்பினார்
அண்ணாநகர்: சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கீதா(52). இவர் அண்ணாநகரில் உள்ள ஐஏஎஸ் அகாடமில் படிக்கின்றார். நேற்று இவர், அண்ணாநகர் 6வது அவென்யூவில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு படிக்க சென்றபோது திடீரென அங்குள்ள மரம் சரிந்து தனது காரில் விழுவது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் 8வது மண்டல மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் ஊழியர்கள் உதவியுடன் கார் மீது விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதுசம்பந்தமாக கீதா கொடுத்த புகாரின்படி, அண்ணாநகர் போலீசார் சி.எஸ்.ஆர் அளித்துள்ளனர்.
கடந்த 21ம் தேதி முகப்பேர் பகுதியில் மரம் விழுந்து கார் சேதம் அடைந்தது. இதில் டிரைவர் உயிர் தப்பினார். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்து பெண் தப்பியுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘’பருவமழை தொடங்க இருப்பதால் மரத்தின் அடியில் பொதுமக்கள் நிற்கவேண்டாம். அதே போல் மரத்தின் அருகே வாகனங்கள் நிறுத்தக்கூடாது. அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்’ என்றனர்.