கார்பன் சமநிலையை எட்ட நகர்ப்புறங்களில் விரைவுபடுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்த மாநில அளவிலான பயிற்சிப் பட்டறை: பல்வேறு துறை உயர் அலுவலர்கள், கல்வியாளர்கள் பங்கேற்பு
சென்னை: கார்பன் சமநிலையை எட்ட நகர்ப்புறங்களில் விரைவுபடுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்த மாநில அளவிலான பயிற்சிப் பட்டறை நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறைசார் உயர் அலுவலர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பன்னாட்டு அறிவுசார் துணைவர்கள் பங்கேற்றனர். இந்தியா-UK- PACT அமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கார்பன் சமநிலையை எட்ட நகர்ப்புறங்களில் விரைவுபடுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்த மாநில அளவிலான பயிற்சிப் பட்டறை சென்னையில் நேற்று நடைபெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையில் நம் மாநிலத்தின் பல்வேறு துறைசார் உயர் அலுவலர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பன்னாட்டு அறிவுசார் துணைவர்கள் பங்கேற்றனர்.இதில் தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்கள் கார்பன் சமநிலையினை எட்ட துரிதப்படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் யுகே-பேக்ட் அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டன.
இந்த பயிற்சிப் பட்டறையானது, இந்தியா-UK- PACT அமைப்பால் இந்தியா, ஐஐடி மெட்ராஸ், செனெக்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மற்றும் போக்குவரத்து சார்ந்த திட்டங்களின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்வின் போது வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ பேசியதாவது: பசுமை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் காலநிலை நிதி போன்ற புதுமையான அணுகுமுறைகள் மூலம் தமிழ்நாடு நிலைத்தகு மற்றும் கார்பன் சமநிலை வளர்ச்சியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
இந்த திட்டங்களுடன் இணைவதன் மூலம் தூத்துக்குடி மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களை தேசிய இலக்குக்கு முன்னர் கார்பன் சமநிலையினை அடைய செயலாற்றிவரும் நான்கு நகரங்களுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட வேண்டும். மேலும் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் ஐஐடி மெட்ராஸ், இந்தியா மற்றும் செனெக்ஸ் ஆகிய நிறுவனங்களால் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்புத் தீர்வுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெடுப்புகள் காலநிலை நடவடிக்கைகளுக்கான திட்டங்கள், துல்லியமான தரவுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் நிதி ஆகியவற்றில் ஒரு முன்மாதிரியாகத் திகழும். இவ்வாறு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ கூறினார்.