ஆம்புலன்ஸ் மீது கார் மோதி 2 பேர் பலி
*6 பேர் படுகாயம்
பாலக்காடு : திருச்சூர் அருகே ஆம்புலன்சும், காரும் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.கேரளமாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் நோயாளியை ஏற்றி கொண்டு கண்ணூர் நோக்கி ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திருச்சூர் அடுத்த குன்னம்குளம் காணிப்பையூர் அருகே எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸ் மீது மோதியது.
இதில், ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் பயணித்த நோயாளியான கண்ணூரை சேர்ந்த குஞ்ஞிராமன் (83), காரில் பயணித்த குன்னம்குளத்தைச் சேர்ந்த அந்தோணியின் மனைவி புஷ்பா (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
ஆம்புலன்ஸ் டிரைவர் அனீஷ் (40), நர்சு விபின் (35), காரில் வந்த சந்திரன் (60), ஷாஜூ (46), வினோத்குமார் (54), புஷ்பாவின் கணவர் அந்தோணி (59) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதைப்பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் குன்னம்குளம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவயிடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் பொது மக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு குன்னம்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து காரணமாக குன்னம்குளம்- திருச்சூர் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து குன்னம்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.