வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75 சதவீதம் அதிகரிக்கும்: இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை
புதுடெல்லி: வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் என்றும், அதில் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என்றும் லான்செட் ஆய்வு எச்சரித்துள்ளது. உலகளவில் புற்றுநோய் மரணங்கள் வரும் 2050ம் ஆண்டுக்குள், தற்போதுள்ளதை விட 75 சதவீதம் வரை அதிகரிக்கும் என ‘லான்செட்’ மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், ஆண்டுக்கு 1.86 கோடி பேர் உயிரிழப்பார்கள் என்றும், புதிதாக 3.05 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையின் பெருக்கம், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களே இந்த அபாயகரமான உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தான் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, கடந்த 1990 முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் 26.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இங்கு ஏற்படும் புற்றுநோய்களில் 70 சதவீதம் வரை, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் தடுக்கக்கூடியவையே என்று ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகையிலை, மதுப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, காற்று மாசுபாடு போன்றவையே இந்தியாவில் புற்றுநோய் அதிகரிக்க முக்கிய காரணிகளாகும்.
மேலும், நோய் கண்டறிவதில் ஏற்படும் தாமதம் மற்றும் தரமான சிகிச்சை கிடைப்பதில் உள்ள சவால்களும் இறப்பு விகிதத்தை அதிகரிக்கின்றன. எனவே, வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலமும், ஆரம்பக்கட்டத்திலேயே நோயைக் கண்டறியும் வகையில் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமும் பெரும்பாலான புற்றுநோய் பாதிப்புகளையும், மரணங்களையும் தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.