மேடையில் ரத்தம் கொட்டிய நிலையில் ரகசியமாக போராடி புற்றுநோயை வென்ற நடிகை: 62 வயதில் ரியாலிட்டி ஷோவில் சாதனை
லண்டன்: கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மேடையில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட ரத்தப்போக்கு காரணமாகப் பரிசோதனை செய்ததில், தனக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகப் பிரபல ஹாலிவுட் நடிகை அலெக்ஸ் கிங்ஸ்டன் (62) தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியம் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், அவற்றை வயது முதிர்வு அல்லது சாதாரண உடல்நலக் குறைவு என்று நினைத்துத் தான் அலட்சியப்படுத்தியதாகவும், பின்னர் தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின்னரே முழுமையாகக் குணமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பிறகு, தற்போது ‘ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங்’ என்ற பிரபல நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவர், இந்த அனுபவம் தனக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
தனது நடன ஜோடியான ஜோஹன்னஸ் ரடேபேவுடன் இணைந்து நிகழ்ச்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அவர், ‘வாழ்க்கை மிகவும் குறுகியது; இந்த நிகழ்ச்சி என்னை மீண்டும் ஒரு சூப்பர் பெண்ணாக உணர வைத்துள்ளது’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், ‘வயது என்பது ஒரு எண் மட்டுமே’ என்பதை நிரூபிக்கும் வகையில் சவால்களை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், பெண்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.