கனடாவில் குடியுரிமை சட்டத்தில் மாற்றம் இந்திய வம்சாவளியினருக்கு அதிக பலனளிக்கும்
ஒட்டாவா: கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியாக சி-3 எனும் மசோதாவை அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் உட்பட பலர் பயன் பெற உள்ளனர். வெளிநாட்டில் பிறந்த கனடியர்களுக்கு தங்களுடைய குழந்தை கனடாவில் பிறந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று கடந்த 2009ம் ஆண்டில் கனடா அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி குறைந்தபட்சம் பெற்றோரில் ஒருவராவது கனடாவில் பிறந்திருந்தால் மட்டுமே வம்சாவளியின் அடிப்படையில் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும். முதல் தலைமுறை வரையறை என்ற இந்த விதியினால் இந்தியர்கள் உள்பட ஏராளமானோர் கனடாவின் குடியுரிமையை பெற முடியாமல் இருந்தனர்.இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2023ல் இதை விசாரித்த ஒன்டாரியோ உச்சநீதிமன்றம் இந்த விதி அரசியல் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளித்தது. கனடா அரசு இந்த முடிவை ஏற்று கொண்ட நிலையில் மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில், கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியாக பில் சி-3 எனும் மசோதாவை கனடா முன்வைத்துள்ளது.இதன் மூலம் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் உட்பட பலர் பயன் பெற உள்ளனர். குழந்தையின் பிறப்பு அல்லது தத்தெடுப்புக்கு முன்பு பெற்றோர்கள் கனடாவில் ஒட்டுமொத்தமாக மூன்று ஆண்டுகள் கழித்திருந்தால், முதல் தலைமுறையைத் தாண்டி வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு கனடா நாட்டு குடியுரிமையை வழங்க முடியும் என்று மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.