தவெக பிரசாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் தவெக-க்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை: திருச்சி தவெக கூட்டத்தின்போது சேதப்படுத்திய பொது சொத்துக்களுக்கான இழப்பீட்டை வசூலிக்காவிட்டால் நீதிமன்றம் தலையிடும். பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகள் வகுக்க வேண்டும். என்று விஜய் பிரசாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க கோரி த.வெ.க. தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13-ந் தேதி திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து வருகிற 20-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
திருச்சியில் நடந்த பிரசாரத்தின் போது போலீஸ் தரப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ரோடு ஷோ போன்றவைகளுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிப்பது இல்லை.
ஆனால், எங்களது கட்சிக்கு மட்டும் போலீசார் கடுமையான நிபந்தனைகள் விதிக்கின்றனர். எனவே, விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை பாரபட்சமின்றி பரிசீலித்து அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி டி.ஜி.பி.க்கு ஆணையிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தவெக பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்குகையில், பாரபட்சமாக நிபந்தனைகள் வழங்கப்படுவது குறித்தும், அனுமதி வழங்கப்படாதது குறித்தும் தவெக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முப்பெரும் விழாவில் முதல்வர் ரோட் ஷோ நடத்தியதையும், அவருக்கு பட்டாசுகளோடு வரவேற்பு வழங்கியது குறித்து தவெக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும். ஏன் இந்த பாரபட்சம்”
என்று அரசுத் தரப்பை பார்த்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது
“நிபந்தனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் விதிக்கப்படுவதுதானே? தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறி நின்று, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு?” முழுமையாக போக்குவரத்து முடங்கினால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல, பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்துக்கு உட்பட்டு நடத்த வேண்டும். விஜய் பரப்புரைக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக்கோரி த.வெ.க. தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி கேட்டுள்ளது.