முகாமில் வழங்கிய மனுக்கள் ஆற்றில் வீச்சு தாசில்தார் இடமாற்றம் 7 பேர் மீது நடவடிக்கை
சிவகங்கை: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டது தொடர்பாக, திருப்புவனம் தாசில்தார் மாறுதல் செய்யப்பட்டுள்ளார். 7 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்தி குறிப்பு: திருப்புவனம் வட்டம், வைகை ஆற்றுப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் கடந்த 29ம் தேதி மிதந்ததாக தகவல் வந்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற அலுவலர்கள் 13 மனுக்களை கைப்பற்றினர். இவை அனைத்தும் நகல் மனுக்கள் என்றும், இதில் 6 மனுக்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களும் ஆகும். இந்த 6 மனுக்கள் ஏற்கனவே இணைய வழியில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்ட மனுக்கள். இந்த மனுக்கள் ஆற்றில் மிதந்தது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிவகங்கை ஆர்டிஓவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தாசில்தார் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும் வட்ட அலுவலகத்தில் பணியில் அலட்சியமாக இருந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.