வியாபாரியை காரில் கடத்தி 1.5 கிலோ நகை கொள்ளை: மர்மக்கும்பலுக்கு போலீசார் வலை
காரைக்குடி: காரைக்குடியில் நள்ளிரவு தங்கநகை வியாபாரியை காரில் கடத்திச்சென்று 1.5 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் விஜயராஜா (40). தங்கநகை வியாபாரி. இவர், தொழில் நிமித்தமாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு பஸ்சில் வந்தார். அங்குள்ள நகை வியாபாரிகளிடம் விற்பதற்காக தனது பையில் சுமார் 1.5 கிலோ தங்கநகைகளை வைத்திருந்தார். காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி சிவம் தியேட்டர் அருகே நடந்து சென்றார்.
அப்போது, மர்மநபர்கள் காரில் அவரை பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென விஜயராஜாவை இழுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். பின்னர், அவரிடம் இருந்த நகை பையை பறித்துக்கொண்டனர். பின்னர், காரைக்குடியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள திருமயத்தில் அவரை காரில் இருந்து தள்ளிவிட்டு, மர்ம கும்பல் தப்பிச்சென்றது. இதையடுத்து விஜயராஜா அங்கிருந்து பஸ்சில் காரைக்குடி வந்தடைந்தார். பின்னர், காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதி சாலைகள், கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர். மேலும், மாவட்ட எல்லையில் செல்லும் கார்களை சோதனை செய்து வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நள்ளிரவில் நகை வியாபாரியை காரில் கடத்திச்சென்று 1.5 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.