தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வியட்நாம் நாட்டுடன் போட்டியிடுவதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு
வாஷிங்டன் : தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வியட்நாம் நாட்டுடன் போட்டியிடுவதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் ரோசோ பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருளாதார நிபுணரும் சிஎஸ்ஐஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான ரிச்சர்ட் ரோசோ ப்ளூம்பர்க் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு தொழிற் வளர்ச்சியில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதலீட்டு மழைப் பொழிவதாகவும் இந்த ஆண்டு மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கான முதலீட்டு உறுதிமொழிகளை பெற்றுள்ளதாகவும் கூறினார்.
இதற்கு தமிழ்நாடு அரசின் அணுகுமுறையே காரணம் என்றும் தெரிவித்த ரிச்சர்ட் ரோசோ, தொழில் வளர்ச்சி பரவல் அதிகம் உள்ள மாநிலமாகவும் இந்தியாவின் கார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி அதிகம் உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்வதாக பாராட்டினார். முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதா அல்லது வியட்நாமில் முதலீடு செய்வதா என்று ஒப்பிட்டு பார்ப்பதாகவும், குஜராத், மராட்டியம் மட்டுமின்றி வியட்நாமுடன் போட்டியிடும் அளவிற்கு தமிழ்நாடு திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.