சி.பி.கண்டிகை காலனியில் புதர்மண்டி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி
ஆர்.கே.பேட்டை: சி.பி.கண்டிகை காலனியில் புதர்மண்டி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சி.பி.கண்டிகை காலனி கிராமத்தில் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஊராட்சி துவக்கப்பள்ளி சுற்றிலும் செடி, கொடி வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.
இதனால் அடிக்கடி விஷ ஜந்துக்கள் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்துகிறது. பள்ளியை சுற்றிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றவேண்டும் என ஆர்.கே.பேட்டை ஒன்றிய நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, புதர்மண்டி கிடக்கும் சி.பி.கண்டிகை காலனி ஊராட்சி துவக்கப்பள்ளியை சரி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.