கல்பாக்கம் அருகே இசிஆர் சாலையில் பஸ்-வேன்மோதல்:2 பெண்கள் பலி
திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே இசிஆர் சாலையில் இன்று காலை புதுவை நோக்கி சென்ற அரசு பேருந்தும், தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற தனியார் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின. இவ்விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக பலியாகினர். கல்பாக்கம் அடுத்த கீழார்கொல்லை கிராமத்தை சேர்ந்த உமா (40), பானு (24) உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள், திருப்போரூர் அருகே ஆலத்தூரில் ஒரு தனியார் கம்பெனியில் நாள்தோறும் ஷிப்ட் அடிப்படையில் வேலை பார்த்து வருவது வழக்கம். இவர்கள் வேலைக்கு வந்து செல்ல, கம்பெனி நிர்வாகம் வேன் ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கீழார்கொல்லை கிராமத்தில் இருந்து இன்று காலை கம்பெனி வேலைக்கு செல்ல வழக்கம் போல் 20க்கும் மேற்பட்ட கிராம பெண்களை ஏற்றிக்கொண்டு, வேன் இசிஆர் சாலை வழியாக திருப்போரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. புன்னமை கிராமத்தை சேர்ந்த சங்கர் (40) என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். அதே சமயத்தில், சென்னையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, இசிஆர் சாலை வழியாக புதுவை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. கல்பாக்கம் அருகே குன்னத்தூர் இசிஆர் சாலையில் வேனும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இவ்விபத்தில், வேன் நொறுங்கியது.
அரசு பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. வேனின் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் சங்கர் உள்பட 20 பெண்களும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். வேனின் இடிபாடுகளில் சிக்கிய கீழார்கொல்லை கிராமத்தை சேர்ந்த உமா, பானு ஆகிய 2 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து வந்த சதுரங்கப்பட்டினம் போலீசார், படுகாயம் அடைந்த டிரைவர் சங்கர் உள்பட 10க்கும் மேற்பட்ட பெண்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிரைவர் சங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அரசு பேருந்து டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.