சிப்காட் அருகே மேட்டுத்தெங்கால் கிராமத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
ராணிப்பேட்டை : மேட்டுதெங்கல் கிராமத்தில் குண்டும் குழியுமான உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜா ஒன்றியம் மேட்டு தெங்கால் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிமக்கள் மேட்டு தெங்கால் கிராமத்தில் இருந்து சிப்காட் பேஸ்-1, நெல்லிகுப்பம் கிராமத்தில் உள்ள சிப்காட் பேஸ்-3, விசி.மோட்டூர், பெல் போன்ற பகுதிகளில் உள்ள கம்பெனிகளுக்கு வேலைக்காக தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் மேட்டுதெங்கால் கிராமத்தில் இருந்து தெங்கால் வழியாக மேல்விஷாரம் சென்று சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்ல முடியும். மேலும் மேட்டுதெங்காலில் இருந்து பெல்சென்று, அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல முடியும். ஆனால் மேட்டு தெங்கால் கிராமத்தில் பிரதானமாக உள்ள தார்சாலை சேதமாகி குண்டும் குழியாக உள்ளது.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வயதானவர்கள், இளைஞர்கள் குண்டும் குழியான சாலை செல்லும் போது கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே மேட்டு தெங்கால் கிராமத்தில் உள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.