அத்தனை பில்டப்பும் வேஸ்ட்டா போச்சே என புலம்பிய மலையான மாஜி தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘பதவியை தக்க வைத்துக்கொள்ள இலைக்கட்சி நிர்வாகிகளை திரைமறைவில் கண்காணித்து வர்றாராமே மாஜி அமைச்சர்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ கட்சியில் ஏதாவது சலசலப்பு ஏற்பட்டால் உடனே நிம்மதியை இழந்து விடுவாராம்... கட்சியில் தற்போது கோபிக்காரர் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.. இதேபோல், கடலோர மாவட்டத்தில் எந்தவித சலசலப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ரொம்பவும் கவனமாக மணியானவர் இருந்து வருகிறாராம்... இதற்காக தனி டீம் அமைத்து திரைமறைவில் முக்கிய நிர்வாகிகளை கண்காணித்து வருகிறாராம்.. கட்சியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதை சமாளிப்பது கடினம். குறிப்பாக, தலைமைக்கு தகவல் சென்றால் தனது பதவிக்கு ஆபத்து என நினைக்கிறராம்.. இந்த டாப்பிக் பற்றித்தான் கடலோர மாவட்டத்துக்குள் அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சி மாஜி தலைவர் நில விவகாரத்தில் சிக்கியதில் எதிர்க்கட்சிக்காரங்களை விட அந்த கட்சியோட முக்கிய தலைவர்கள்தான் செம ஹேப்பியா இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் மலராத கட்சியின் மாஜி தலைவர் மான்செஸ்டர் மாவட்டத்துல விவசாய நிலம் வாங்கிய விவகாரம் வெளிவந்ததுல எதிர்கட்சிக்காரங்களை விட மலராத கட்சியோட முக்கிய தலைவர்கள் செம ஹேப்பியாக இருக்காங்களாம்.. இந்த விவகாரம் மாஜி தலைவரின் இமேஜை பெரிய அளவில் டேமேஜ் ஆக்கிவிட்டதாம்.. விவசாயி மகன், நேர்மையான அதிகாரி, இயற்கை விவசாயம், ஊழல் எதிர்ப்பு, மிஸ்டர் கிளீன் என தன்னோட வார் ரூம் மூலமா செய்யப்பட்ட அத்தனை பில்டப்பும் நில விவகாரத்துல பெயர் கெட்டுப்போச்சேன்னு தனது வீட்டிற்கு மாத வாடகை செலுத்தும் நண்பர்கள் கிட்ட புலம்பி தள்ளினாராம் மாஜி தலைவர். அவ்வளவு பெரிய செங்கல் சூளை விவகாரத்துல ஆகாத டேமேஜ் சாதாரண ஒரு நில விஷயத்துல எப்படி இப்படி நடந்ததுன்னு தெரியலையேன்னு வருத்தப்பட்டாராம்.. வாடகை கொடுக்கிற நண்பர்கள் கிட்ட நடத்துன ஆலோசனைக்கு பிறகு விளக்க அறிக்கை தயாராச்சாம்.. விளக்க அறிக்கை கொடுத்தா நிலைமை சரியாகிவிடும்னு நினைச்சா அது பிரச்னையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய்விட்டதாம்.. நிலைமை மோசமாகி கலக்கத்துல மாஜி தலைவருக்கு காய்ச்சலே வந்திடுச்சாம்.. இப்ப தலைநகரில் ஓய்வுல இருக்கிறதா சொல்றாங்க ஆதரவாளர்கள்.. வழக்கமான காய்ச்சலா அல்லது ரெய்டு பயத்துல வந்த காய்ச்சலான்னு தெரியலைன்னு எதிரணி கிண்டல் பேசுறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போக்சோ வழக்கில் தனிப்பிரிவு காவலரை சக காக்கிகளே சிக்க வைத்து விசாரணையை தீவிரப்படுத்திட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குறிச்சி மாவட்டம் மலை பகுதியின் கரியாலூர் ஸ்டேஷனில் தனிப்பிரிவு காவலராக நடிப்பில் திலகமானவரின் பெயர் கொண்டவர் பணியாற்றுகிறாராம்.. ராஜபிரபுவான அவர் சொல்வதை கேட்காவிடில் மற்றவர்கள் பெயரில் தானே எஸ்பிக்கு மொட்ட கடிதம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளாராம்.. அந்த மனு மீண்டும் தனிப்பிரிவுக்கு தன் மேஜைக்கே வரும்போது சம்பவம் நடந்தது உண்மைதான் என பதில் கொடுத்து எளிதாக நடவடிக்கையும் எடுத்து விடுவாராம்.. சமீபத்தில் மலையில் ஒரு பெட்டி கடையில் போதை வஸ்துக்கள் சிக்கிய நிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டதாம்.. பின்னர் அந்த வியாபாரியின் மகளான பள்ளிச் சிறுமியிடம், நல்லவன் போல் உதவி செய்வதாக நைசாக செல்போன் நம்பரை வாங்கினாராம்.. பின்னர் வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பியும், வீடியோ காலிலும் பேசி தொல்லை கொடுத்ததோடு, சில நாட்களுக்கு முன்பு அச்சிறுமியை நேரில் சந்தித்த ராஜ பிரபுவானவர் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம்.. இவ்விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர ஊர் முக்கியஸ்தர்களை திரட்டி ராஜபிரபுவை கண்டித்தனராம்.. பிரச்னை பூதாகரமாக புகார் கொடுத்திடாதீங்க... பணம் கொடுத்திடுகிறேன்... என கெஞ்சினாராம் அவர்.. இத்தகவல் சக காவலர்களுக்கு தெரியவர ராஜபிரபுக்கான பதிலடிக்கு இதுதான் சரியான தருணம் என கருதி, சிறுமியின் குடும்பத்தினரை நேரடியாக டிஐஜியை சந்திக்க செய்ய வேண்டியதை செய்து புரத்துக்கே அனுப்பி வைத்து விட்டார்களாம்.. இதன் மீது நடவடிக்கைக்கு அவர் உத்தரவிட, ஏடிஎஸ்பி விசாரித்ததில் குற்றம் உறுதி செய்யப்பட்டதாம்.. அத்தோடு ராஜபிரபு தங்கியிருந்த குடியிருப்பு அறையையும் சோதனையிட்டார்களாம்.. அங்கு 2 துப்பாக்கிகள், ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட குட்காக்கள் உள்ளிட்டவை கிடைக்க, அதிர்ச்சியடைந்த ஏடிஎஸ்பியோ அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறாராம்.. போக்சோவுடன் மேலும் சில வழக்குகள் ராஜபிரபு மீது பாயலாம் என்பதால் இதுபற்றிதான் குறிச்சி காக்கி சகாக்களிடத்தில் பரவலாக பேச்சு ஓடுகிறதாம்.. என்றார் விக்கியானந்தா.
‘‘தூங்கா நகரத்தில் மலராத கட்சிக்கு எதிராக மாஜி அமைச்சர்களும், எம்எல்ஏவும் ஒற்றுமையாக இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கூட்டணியாக இருந்தாலும் தூங்கா நகரத்துல இலைக்கட்சியினரும், மலராத கட்சியினருக்கும் இடையே அவ்வளவாக இணக்கமான சூழல் இல்லையாம்.. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருவரும் தனித்தனி அணியாக போட்டியிட்ட நிலையில், இலைக்கட்சி வேட்பாளரான டாக்டரை, மூன்றாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்தை மலராத கட்சியின் வேட்பாளரான பேராசிரியர் பிடித்தாராம்.. அதிலிருந்தே தூங்கா நகரத்தில இந்த இரண்டு கட்சியினரிடையே ஒத்துப்போகவில்லையாம்.. மாவட்டத்தில் தாங்கள்தான் பெரிய கட்சி என மலராத கட்சியினர் கூறி வருவது, இலைக்கட்சியினருக்கு பிடிக்கவில்லையாாம்.. இதனால் இரு கட்சியினரிடையே தாமரை இலை, தண்ணீர் போலத்தான் உறவு இருந்து வருகிறதாம்... இந்த விவகாரம் சமீபத்தில் சேலத்துக்காரரின் தூங்காநகர் பிரசார விசிட்டிலும் பிரதிபலித்ததாம்.. சேலத்துக்காரர் தூங்கா நகர் வந்தபோது அவரது பிரசார பஸ்சில் ஏற முயன்ற மலராத கட்சியின் செயலாளரான பேராசிரியரை ஏறவிடாமல் தடுத்து இறக்கி விட்டுள்ளனர்.. இதனை சேலத்துக்காரரும் கண்டுகொள்ளாமல் இருந்தாராம்.. இதனால் விரக்தியடைந்த அவர், உடனே அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாராம்.. மற்ற பிரசார இடங்களுக்கும் செல்லவில்லையாம்.. மற்ற விஷயத்தில் எப்படியோ? தூங்கா நகரில் 2 மாஜி அமைச்சர்கள், ஒரு எம்எல்ஏ என 3 பேரும் இந்த விஷயத்தில் ரொம்ப ஒற்றுமையாக உள்ளனராம்... மாநில அளவில் இரு கட்சியினரும் கூட்டணியாக செயல்பட்டாலும், தூங்கா நகரத்தில் இன்னும் இவர்களிடையே கூட்டணி ஏற்படவில்லை. இப்படியே போனால் தூங்கா நகரின் 10 தொகுதிகளும் தூங்கி வழிஞ்சுடும் என இரு கட்சியினரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.