கட்டிட பராமரிப்பு பணிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
சென்னை: சென்னை, சேப்பாக்கம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைப் பொறியாளர், மண்டல தலைமைப் பொறியாளர்கள், பொறியாளர்களுடன் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். கண்டறியப்பட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளில் வெள்ளத்தடுப்பு சாதனங்கள் உரிய அளவில் சேமித்து வைக்கப்பட வேண்டும். கட்டிடங்களில் நீர்கசிவு ஏற்படாத வண்ணம் தேவையான வாட்டர் ப்ரூப் நடைமுறைகள் பயன்படுத்திட வேண்டும்.
எம்-சாண்ட் சுவர் பூச்சு பயன்பாட்டிற்கு தேவையான கெமிக்கல் கலவை (போஸ்ராக் நிறுவனத்தின் செபக்ஸ் 113 கலவை போன்றவை) பயன்படுத்திட வேண்டும். கட்டிட பராமரிப்பு பணிகளின்போது, தற்போது நடைமுறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். கட்டிடப் பணிகள் துவங்கப்படுவதற்கு முன், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட தேவையான அனைத்து அனுமதிகளும் பெற வேண்டும்.
மேலும் கட்டிடம் கட்ட திட்டமிடும்போது, பணித்தளத்தின் அருகில் தொன்மையான கட்டிடங்கள் இருப்பின் தொல்லியல் துறையால் ஆட்சேபனை எழும் பட்சத்தில், அதன் விதிகளின்படி கட்டிடம் வடிவமைக்கப்பட வேண்டும். தலைமைப் பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொறியாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மின் பொறியாளர்களுடன் அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, மின் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக, கேபில் பணி, டிரான்பார்மர், லிப்ட், ஜெனரெட்டர் ஆகியவற்றில் நேரடி தனி கவனம் செலுத்த வேண்டும். கட்டுமான பணியின்போது, தேவையான பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும். கட்டுமான பணியின் ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும், கட்டுமான தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் முறையாக பின்பற்றப்படுகிறாதா என்பதையும் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, முதன்மை தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், தலைமைக் கட்டிட கலைஞர் இளவெண்மாள், பொதுப்பணித்துறை மண்டல தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.