பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு ரூ. 5,000 வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..!!
சென்னை: பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு ரூ. 5,000 வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பௌத்தர்களின் புனித யாத்திரை என்பது கௌதம புத்தரின் வாழ்க்கை தொடர்பான புனிதத் தலங்களுக்குச் செல்லும் பயணமாகும். லும்பினி (பிறந்த இடம்), புத்தகயா (ஞானம் பெற்ற இடம்), சாரநாத் (முதல் போதனைகளை வழங்கிய இடம்), மற்றும் குஷிநகர் (மரணமடைந்த இடம்) ஆகிய நான்கு முக்கிய இடங்கள் புத்தர் தனது உதவியாளர் ஆனந்தருக்கு பரிந்துரைத்த புனித யாத்திரை தலங்களாகும். இவை தவிர, பௌத்தர்கள் பல இடங்களுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். இந்த நிலையில், பௌத்தர்கள் புனித யாத்திரை செல்வதற்கு அரசு பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது. அந்த வகையில், 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்குச் சென்று திரும்பும் 150 பௌத்தர்களுக்கு, தமிழக அரசு தலா ரூ. 5,000 வரை மானியம் வழங்குகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30, 2025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பவும்; ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600 005.
யார் விண்ணப்பிக்கலாம்?
பௌத்த மக்கள் இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவம் எங்கே கிடைக்கும்?
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றிப் பெற்றுக்கொள்ளலாம். (அ)www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.