மொட்டு காளான் சாகுபடி அமோகம்
கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் மொட்டு காளான் சாகுபடி கணிசமாக அதிகரித்துள்ளதால், அதைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தயாராகும் மொட்டு காளான் சுவை மிகுந்தது. அசைவ உணவிற்கு ஈடான சுவையை தருவதால் சுப நிகழ்ச்சிகளின்போது தவிர்க்க முடியாத உணவாகவும், ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவாகவும் காளான் இருக்கிறது.
அதிலும் நீலகிரி மொட்டு காளானுக்கு சந்தையில் நல்ல வரவேற்புள்ளது. இதனால் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காளான் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காளான் வளர்ப்பிற்கு தனியாக குடில் அமைத்து, அதில் காளான் வளர்ப்பு பைகளை அடுக்கி, அதில் தரமான விதைகளை விதைத்து பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மொட்டு காளான் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.
மாவட்டத்தின் காலநிலை மொட்டு காளான் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பதால், அவை இயற்கையாகவே வளர்கிறது. வளர்ந்த காளானை 5 நாட்கள் வரை வைக்கலாம். காளான் ஒருமுறை சாகுபடி செய்தால், 40 நாட்களில் மீண்டும் வளரும் தன்மை கொண்டதாகும். மழை காலத்தில் காளான் வளர்ச்சி அதிகரித்து இருக்கும்.
கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால், காளான் வளர்ச்சி குறைவாக இருக்கும். மேலும் நோய் பாதிப்பும் ஏற்படுவதால், மகசூல் குறைவாக இருக்கும். தற்போது அதிக வெப்பம் இல்லாத இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் காளான் சாகுபடி அதிகரித்து வருகிறது.
இது ஆடி மாதமாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறாத நிலையில், காளானின் தேவை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் இம்மாத இறுதியில் இருந்து சுப நிகழ்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதால் காளான் கொள்முதல் விலை உயர வாய்ப்புள்ளது.
அதாவது கடைகளில் தற்போது கிலோவுக்கு 200 முதல் 250 ரூபாய் வரை மொட்டு காளான் விற்பனை செய்யப்படுகிறது. சாகுபடி அதிகரித்து வரும் நிலையில் விசேஷ நேரங்களில் கொள்முதல் விலை உயரக்கூடும் என்பதால், விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே காளான் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.