ரூ.31 கோடியில் தூர்வாரப்படும் பக்கிங்காம் கால்வாயில் நச்சுகளை அகற்ற தாவரங்கள் நட முடிவு: மயிலாப்பூர், மந்தைவெளி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகள் மேம்படும்
ரூ.31 கோடியில் தூர்வாரப்படும் பக்கிங்காம் கால்வாயில், நச்சுக்களை அகற்ற தாவரங்களை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாய் சோழமண்டல கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய் ஆகும். இந்த கால்வாய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. பக்கிங்காம் கால்வாய் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது. 1806ம் ஆண்டு சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை தோண்டப்பட்டு, பின்னர் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிவரை இணைக்கப்பட்டது. 1886ம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக எண்ணூரில் இருந்து அடையாறு வரை பக்கிங்காம் கால்வாய் நீட்டிக்கப்பட்டது. பின்னர் அது விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டு நீர்வழி வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்பட்டது. உலகிலேயே ஒரே இடத்தில் நீர்வழி, நிலவழி, ரயில்வழிப் பாதை அமைக்கப்பட்ட இடமாக சென்னை சென்ட்ரல் பகுதி இருந்தது. மேலும் இந்த கால்வாய், மனிதனால் உருவாக்கப்பட்ட உப்பு கால்வாய். ஆந்திராவில் உப்பு கால்வாய் என்றே இன்றும் கூறுகின்றனர்.
புலிக்காடு, ஸ்ரீஹரிகோட்டா காட்டில் இருந்து, பக்கிங்காம் கால்வாய் வழியாக சென்னைக்கு விறகு மற்றும் கரி கொண்டு வரப்பட்டன. இந்த விறகில் தான், சென்னைவாசிகள் சமைத்தனர். பக்கிங்காம் கால்வாய் சோழமண்டல கடற்கரை பகுதிகளுக்கு நீர்வழிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட முதன்மையான நீர்வழி ஒன்றாகும். இதன் முழு நீளம் சுமார் 796 கிலோ மீட்டராகும். பழவேற்காடு ஏரி முதல் கூவம் ஆறு கலக்கும் இடம் வரையிலான சுமார் 58 கி.மீ. நீளம் வடக்கு பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறும் அடையாறு ஆறும் கலக்கும் இடத்திற்கு இடையேயான 7.2 கி.மீ. நீளப் பகுதி மத்திய பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆறு முதல் மரக்காணம் வரையிலான சுமார் 102 கி.மீ. நீளத்திற்கு தெற்கு பக்கிங்காம் கால்வாய் என அழைக்கப்படுகிறது. மரக்காணத்தில் இருந்து காய்கறி மற்றும் வைக்கோல் வந்தன.
தற்போதுள்ள மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் அருகே, பக்கிங்காம் கால்வாய் மேல் பாலம் உள்ளது. அங்கு தண்ணீர் துறை தொட்டி என்ற பெரிய காய்கறி சந்தை இருந்தது. தற்போதைய சிட்டி சென்டர் உள்ள பகுதியில், விறகு தொட்டி இருந்தது. அங்கு தான் விறகுகள் வந்து இறங்கின. பழங்காலத்தில் வணிக பாதையாகவும், உள்நாட்டு போக்குவர்த்து பாதையாகவும் செயல்பட்ட பக்கிங்காம் கால்வாய் இன்று கழிவு நீர் வெளியேற்றம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கழிவுநீரோடும் கால்வாயாக மாறியுள்ளது. சென்னையின் முக்கியமான நீர் வழித் தடங்களில் ஒன்றான பக்கிங்காம் கால்வாய், 7.3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. தற்போது, இதனை தூர்வாரி அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது, இதற்காக ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 6.50 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், கால்வாயில் சேரும் நச்சு மற்றும் கழிவுகளை அகற்றி, அதன் வெள்ள நீரைத் தாங்கும் திறனை மேம்படுத்துவதாகும். தற்போது, கால்வாயில் உள்ள நச்சு மற்றும் கழிவுகளை அகற்ற அதற்கான தாவரங்களை நடும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இது, கால்வாயின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நகரின் வெள்ள பாதிப்புகளை குறைக்கவும் உதவும். கால்வாய்க்கு நடுவில் பாலங்கள் உள்ள இடங்களில், கற்கள் பதிக்கப்பட்டு, புற்கள் மற்றும் தாவரங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த அழகுப்படுத்தும் பணி, கால்வாயின் அழகை மேம்படுத்துவதோடு, அதன் சுற்றுச்சூழல் நலனையும் பாதுகாக்கும். இது, கால்வாயை ஒரு பொதுவெளி அல்லது பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதற்கும் உதவும். மேலும், மழைக்காலங்களில், மயிலாப்பூர், மந்தைவெளி, சேப்பாக்கம், திருவல்லிகேணி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் வரும் மழைத்தண்ணீர், பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது. ஆனால், கால்வாயின் தற்போதைய நிலையால், இந்த நீர் திறம்பட வெளியேறுவதில்லை.
இது வெள்ள பாதிப்புகளுக்கு காரணமாகிறது. இந்த திட்டம், கால்வாயை தூர் வாரி, அதன் வெள்ள நீரைத் தாங்கும் திறனை மேம்படுத்தி, மக்களை மழைக்காலங்களில் காப்பாற்றும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. பக்கிங்காம் கால்வாய் தூர் வாரும் பணி மற்றும் அழகுப்படுத்தும் திட்டம், சென்னையின் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் முக்கியமான படியாக அமைகிறது. இந்த திட்டம், கால்வாயின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அதன் அழகையும் அதிகரிக்கும். ஆனால், திட்டத்தின் நீடித்த தன்மை மற்றும் பரந்த அளவிலான பயன்பாடு குறித்து இன்னும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தால், சென்னையின் மழைக்கால பாதிப்புகளை குறைக்கும் முக்கியமான பங்களிப்பாக அமையும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.