பக்கிங்காம் கால்வாயில் ரூ.204 கோடியில் இரும்புப் பாலம்: கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்
சென்னை: சென்னையில் நீலாங்கரை, ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் இணைப்புச் சாலை திட்டத்தில் இடம்பெறும் இரும்பு பாலத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் முக்கிய சாலைகளாக திகழும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைகளில் திருவான்மியூர் மற்றும் சோழிங்கநல்லூரில் மட்டுமே நேரடி இணைப்பு சாலைகள் உள்ளன. இந்த இரு பகுதிகளுக்கும் இடையே சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவிற்கு நேரடி இணைப்பு சாலை எதுவும் இல்லை. இதை கருத்தில் கொண்டு நீலாங்கரையில் இருந்து விமான நிலையத்திற்கு விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் புதிய சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை இணையும் இடத்திலிருந்து நீலாங்கரையை நேரடியாக இணைக்கும் சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இதில் முக்கிய அம்சமாக பக்கிங்காம் கால்வாய் குறுக்கே ரூ.204 கோடி மதிப்பில், 335 மீட்டர் நிலத்தில், 6 வழிச்சாலையுடன் கூடிய இரும்பு பாலம் அமைய உள்ளது. இதில் 99 மீட்டர் பகுதி கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையத்தின் கீழ் வரும் நிலையில் அந்த ஆணையம் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. திருவான்மியூர் மற்றும் சோழிங்கநல்லூருக்கு இடைப்பட்ட பகுதியில் நீலாங்கரை, ஓ.எம்.ஆர் சாலை இடையே இரும்பு பாலத்துடன் அமையும் நேரடி சாலையால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரும்பு பாலத்தை 5 மாதங்களில் கட்டமைத்து முடிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த சாலை பயன்பாட்டுக்கு வர உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.