புச்சி பாபு கிரிக்கெட் ஆக.18ம் தேதி தொடக்கம்
சென்னை: புச்சி பாபு நினைவு கிரிக்கெட் வரும் 18ம் தேதி துவங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) தலைவர் அசோக் சிகாமணி, புச்சிபாபு கிரிக்கெட் போட்டி தலைவர் டி.வி.ரவி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: டிஎன்சிஏ சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் அகில இந்திய புச்சி பாபு நினைவு கிரிக்கெட் போட்டி, வரும் 18ம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் ஐதராபாத் உட்பட பல்வேறு மாநில, மாநகரங்களைச் சேர்ந்த கிரிக்கெட் சங்கங்களின் 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
டிஎன்சிஏ சார்பில் 2 அணிகள் களம் காண உள்ளன. இந்த 16 அணிகள் தலா 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் தலா ஒரு அணி அரையிறுதியில் களம் காணும். ஒவ்வொரு ஆட்டமும் தலா 3 நாட்கள் நடைபெறும்.
இறுதி ஆட்டம் மட்டும் 4 நாள் ஆட்டமாக நடத்தப்படும். இது செப். 6, 7, 8, 9ம் தேதிகளில் நடக்கும். எல்லா ஆட்டங்களும் சென்னையின் பல்வேறு கல்லூரி வளாகங்களில் நடைபெறும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையுடன் 3 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். மேலும் 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.