போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கொடூரன்; மீண்டும் 7 வயது சிறுமியை சீரழித்து கொடூர கொலை: பாலியல் வழக்கில் அலட்சியத்தால் நடந்த அவலம்
பிவண்டி: பாலியல் கொலை வழக்கில் கைதாகி காவல்துறை பிடியிலிருந்து தப்பிய கொடூரன், இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 7 வயது சிறுமியை சீரழித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் கடந்த 2023ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான நபர், இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பிச் சென்றார்.
இந்நிலையில், வேறு ஒரு பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு அறை எடுத்துத் தங்கிய அந்த நபர், தனது பக்கத்து வீட்டில் வசித்த 7 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொன்று உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி வீசியுள்ளார். இதையடுத்து, தனது சொந்த மாநிலமான பீகாருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவரை அதே இரவில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம், காவல்துறையின் பெரும் அலட்சியத்தையும், வீட்டு உரிமையாளர்களின் பொறுப்பற்ற தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நீதிமன்றக் காவலில் இருந்த குற்றவாளி எப்படி தப்பிச் சென்றான் என்பது குறித்து, அவரை அழைத்துச் சென்ற காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தப்பிச் சென்ற குற்றவாளிக்கு முறையான ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்பு இன்றி வாடகைக்கு அறை கொடுத்த வீட்டு உரிமையாளர் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.