ரூ.4.14 கோடி காப்பீட்டு பணத்திற்காக லாரி ஏற்றி அண்ணன் கொலை: தம்பி உட்பட 3 பேர் கைது
திருமலை: கடன் பிரச்னையை தீர்க்க ரூ.4.14 கோடி காப்பீடு பணத்திற்காக தனது சொந்த அண்ணன் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். `செல்பி’ வீடியோவால் சதி திட்டம் அம்பலமானதையடுத்து அவரது தம்பி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ராமடுகு பகுதியை சேர்ந்தவர் மங்கோடி நர்சய்யா. இவரது மகன்கள் வெங்கடேஷ் (37), நரேஷ் (35). இவர்களில் மூத்த மகன் வெங்கடேஷுக்கு மனநலம் பாதிப்பு இருந்துள்ளது. இளையமகன் நரேஷ், 2 டிப்பர் லாரிகளை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார். மேலும் இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தாராம். ஆனால் அதில் ரூ.1.50 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பலரிடம் கடன் பெற்று வந்துள்ளார். கடனை அடைப்பதற்காக தனது அண்ணன் வெங்கடேஷின் பெயரில் ரூ.4.14 கோடிக்கு காப்பீடு செய்தார்.
கடந்த 29ம் தேதி ராமதுகு அருகே உள்ள புறநகர் பகுதியில் டிப்பர் லாரி பழுதாகிவிட்டதாக கூறி வெங்கடேஷை தம்பி நரேஷ் அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த வெங்கடேஷ் லாரியின் அடியில் நுழைந்து ஜாக்கியை பொருத்த முயன்றார். அப்போது லாரி இயக்கியதில் டயரில் சிக்கி வெங்கடேஷ் பலியானார். விரைந்து வந்த போலீசார் விசாரித்தனர். அப்போது டிரைவர் பிரதீப் அலட்சியமாக வாகனத்தை இயக்கியதால் தனது அண்ணன் வெங்கடேஷ் இறந்ததாக போலீசை நரேஷ் நம்பவைத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால் அதற்குள் நரேஷ், காப்பீடு நிறுவனத்திடம் காப்பீடு தொகை பற்றி பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காப்பீடு நிறுவன அதிகாரிகள் போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் நரேஷ், டிரைவர் பிரதீப் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தனர். மேலும் இவர்களது செல்போன்களை ஆய்வு செய்தனர். அப்போது, கொலைக்கு உதவினால் பணம் தருவதாக தனது நண்பர் ராகேஷுக்கு நரேஷ் அனுப்பிய வீடியோ செய்தி சிக்கியது. இதையடுத்து, 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.