ஐரோப்பாவையும் மேற்கு மதிப்புகளையும் இஸ்ரேல் காப்பாற்றுகிறது: பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருடன் இஸ்ரேல் அதிபர் கடும் வாதம்
லண்டன்: காஸாவில் நடந்து வரும் போரின் மூலம் ஐரோப்பாவையும், மேற்கு உலகின் மதிப்புகளை இஸ்ரேல் காப்பாற்றி வருகிறது என அந்நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக் லண்டனில் உரையாற்றினார். இஸ்ரேல் தங்கள் நாட்டு மக்களின் ரத்தத்தாலும், கண்ணீராலும் ஐரோப்பாவையும், சுதந்தர உறவையும் பாதுகாத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த உரைக்கு சில மணி நேரங்களுக்கு முன் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் ஐசக் ஹெர்சாக் சந்தித்தார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்திய கடுமையான விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு கத்தாரில் உள்ள ஹமாஸ் அரசின் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்திய அடுத்த நாளே நடைபெற்றது. மத்திய கிழக்கில் முக்கிய கூட்டாளியான கத்தாரில் தாக்குதல் நடத்தப்பட்டதை பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கடுமையாக கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.