ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் பிரதமர் மோடி: வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு
டெல்லி: ஜூலை 23 முதல் 25ம் தேதி வரை பிரிட்டன், மாலத்தீவு நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு பிரிட்டன் வரியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பிரிட்டன் நாட்டின் விஸ்கி, கார்கள் உள்ளிட்டவைகளை இந்தியாவில் விற்பனை செய்வதை எளிதாக்கும் அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இருக்கலாம் எனத்தெரிகிறது.
பிரிட்டன் பயணத்தை முடித்து விட்டு, பிரதமர் 25, 26ம் தேதிகளில் மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கு அவர் 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். மாலத்தீவு - இந்தியா இடையேயான உறவில் சமீப காலமாக கசப்புணர்வுகள் அதிகரித்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி தனது பயணத்தின் போது மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.