கடிவாளம் கட்டிய குதிரைதான் நான்: நயினார் விரக்தி
கோவில்பட்டி: ‘குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் செயல்படுத்துவது தான் எனது பணி’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கோவில்பட்டியில் பிரசாரத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘தமிழகத்தில் அடுத்த முதல்வராக இபிஎஸ் தான் வருவார்.
பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ்மொழி குறித்து பெருமை பேசி வருகிறார். பீகாரில் 202 இடங்களில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைப்பது போல் செய்தி வருகிறது.
இன்னும் எத்தனை கூட்டணிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். யார் முதலமைச்சராக வர வேண்டும் என்பதை விட, யார் இந்த நாட்டை ஆளக்கூடாது என்பதில் பாஜ தெளிவாக உள்ளது. எங்கள் அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதனை குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் செயல்படுத்துவது தான் நயினார் நாகேந்திரன் பணி. இவ்வாறு அவர் பேசினார்.