லஞ்சம் வாங்கிய மதுவிலக்கு போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் சுந்தரவாணன், பிரேம்நாத் ஆகியோர் சென்று சோதனை செய்தபோது கள்ளத்தனமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது உறுதியானது.
இந்நிலையில், மதுபானம் விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யாமலும், கைது செய்யாமலும் இருக்க காவலர்கள் 2 பேரும் லஞ்சம் வாங்கியதாக கூறபடுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும், சுந்தரவாணன் மற்றும் பிரேம்நாத் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி மாதவன் உத்தரவிட்டார்.
மேலும் இது சம்மந்தமாக தொடர் விசாரணை செய்ததில், இரண்டு காவலர்களும் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி மாதவன் நேற்று உத்தரவிட்டார்.