மதிப்பெண், வருகைப் பதிவுக்கு லஞ்சம்; பேராசிரியையின் பணி நீக்கம் செல்லும்: டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி: மாணவிகளிடம் மதிப்பெண் மற்றும் வருகைப் பதிவிற்காக லஞ்சம் கேட்ட பேராசிரியையின் பணி நீக்கத்தை உறுதி செய்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த செயல் கல்வி நேர்மைக்கு விடப்பட்ட சவால் எனக் கடுமையாகக் கண்டித்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியையாகப் பணியாற்றி வந்த தெல்மா ஜே.தல்லூ என்பவர், கடந்த 2008ம் ஆண்டு, மாணவிகளுக்கு மதிப்பெண் மற்றும் வருகைப் பதிவிற்காக லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
பணம், செல்போன், முத்து மாலை, வைரக் கம்மல், புடவை எனப் பல பொருட்களை லஞ்சமாகக் கேட்டதாக அகன்ஷா குலியா, சரஸ்வதி சப்ரா உள்ளிட்ட மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது. விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், மேல்முறையீட்டுக் குழு, குற்றச்சாட்டுகளை உறுதி செய்தாலும், தண்டனையை மட்டும் பணி நீக்கமாகக் குறைத்தது. இதன் மூலம் அவர் தனது ஓய்வூதியப் பலன்களைப் பெற அனுமதிக்கப்பட்டார். தனது பணி நீக்கத்தை எதிர்த்து தெல்மா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங் அளித்த தீர்ப்பில், பேராசிரியையின் பணி நீக்கத்தை உறுதி செய்து உத்தரவிட்டார்.
பல்கலைக்கழக விசாரணை நியாயமாக நடந்ததாகவும், குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. மேலும், ‘மாணவிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் பெறுவது குற்றம். இது கல்வித்துறையின் நேர்மைக்கே விடப்பட்ட சவால்’ என நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. ஏற்கெனவே தண்டனை குறைக்கப்பட்ட நிலையில், அதில் தலையிட முடியாது எனவும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.