ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்: தடுப்பு வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் விளக்கம்
ஒரு சில உடல் செல்கள் கட்டுப்பாடில் இல்லாமல் வளர்ந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவுகின்றன. இதன் காரணமாக புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக, மனித செல்கள் வளர்ந்து பெருகி, புதிய செல்களை உருவாக்குவதற்கான சிக்னல்களைப் பெறும்போது அவை உருவாகின்றன. இந்த வழக்கமான செயல்முறை மாறும்படும்போது, சேதமடைந்த செல்கள் தொடர்ந்து வளர்ந்து பெருகும். இந்த அசாதாரண மற்றும் சேதமடைந்த செல்கள் ஒன்றிணைந்து புற்றுநோயை உருவாக்குகின்றன.
புற்று நோயைப் பொறுத்தவரை 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதில் குறிப்பாக, இன்றைய காலக்கட்டத்தில் இந்தியப் பெண்களைப் பாதிக்கும் மிகவும் பொதுவான ஒரு நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. ஆண்டுதோறும் 2 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பலருக்கு முற்றிய நிலையில் இது கண்டறியப்படுவதால் அவர்களின் உயிரையும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும், இந்த நோய் பாதித்த நபரின் வாழ்க்கை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும், சமூகத்திற்கும் பெரியதொரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாத காரணத்தால், முற்றிய நிலையில் மருத்துவரிடம் சிகிச்சைக்கு வரும்போது அது அவர்களின் இறப்பிற்கும் வழிவகுக்கிறது. ஆரம்பகால கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சைகள் மூலம் இதை குணப்படுத்த முடியும். எனவே, இந்த பாதிப்பில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். மேலும், நவீன வாழ்க்கை முறை சூழலும், மார்பக புற்றுநோயை ஏற்படுத்துவதில் முக்கிய காரணியாக உள்ளது.
ஆரம்பகால நோயறிதலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அதிநவீன தொழில்நுட்பத்தில் மருத்துவமனைகள் முதலீடு செய்வது என்பது தற்போது அவசரத் தேவையாக உள்ளது. ஆரம்பகால கண்டறிதல் உயிர்களைக் காப்பாற்றும், சிகிச்சையின் தீவிரத்தை குறைக்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தும் என்ற உண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
இதுகுறித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும், ஆன்கோபிளாஸ்டிக் மார்பக அறுவை சிகிச்சை நிபுணருமான செல்வி ராதாகிருஷ்ணா கூறியதாவது:
பாரம்பரியமாக, இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் என்பது வயதான, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் நோயாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது அந்த வயது வரம்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, 30 மற்றும் 40 வயது பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரித்து காணப்படுவது தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களிடையே ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றமே ஆகும். கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் இது அதிகமாகக் காணப்படுகிறது.
போதிய உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக உடல் பருமன் மற்றும் இன்சுலின் பாதிப்பு. தாமதமான திருமணம் மற்றும் தாமதமான முதல் பிரசவம், ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகள். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்தை குறைத்தல்.
குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் நிறுவனங்களை நிர்வகிக்கும் பெண்களிடையே ஏற்படும் அதிகளவு மன அழுத்தம். அழகு சாதனப் பொருட்கள், பிளாஸ்டிக்குகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நாளமில்லா சுரப்பியை பாதித்தல். இவை அடிப்படை மரபணு மற்றும் ஹார்மோன் காரணிகளுடன் தொடர்பு கொள்கின்றன, இதனால் மார்பக புற்றுநோய் உருவாகும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது மிகக் குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் மார்பகப் புற்றுநோயின் மிகவும் கவலைக்குரிய அம்சங்களில் ஒன்று, பெரும்பாலான பெண்கள் நோயறிதலுக்காக வரும் தாமதமான நிலை ஆகும். தேசிய புற்றுநோய் பதிவேடு தரவு மற்றும் மருத்துவமனை சார்ந்த ஆய்வுகளின்படி, 60 சதவீதத்திற்கும் அதிகமான மார்பகப் புற்றுநோய்கள் 3வது கட்டத்தில் கண்டறியப்படுகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
மார்பகம் தொடர்பான பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை. மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் நோய் பற்றி அறிந்துகொள்வதில் உள்ள கலாச்சாரத் தடைகள். குறிப்பாக கிராமப்புறங்களில், நோயறிதலுக்கான வசதிகள் குறைவாக உள்ளது. நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை குறித்த பயம் தாமதத்திற்கு வழிவகுக்கிறது. தாமதமாக கண்டறியப்படுவதால் உயிர் பிழைப்பு விகிதம் மிகக் குறைவு என்பதோடு அதற்கான செலவுகளும் அதிகம் ஆகும். மேலும், அவ்வாறு செலவு செய்து சிகிச்சை மேற்கொண்ட போதிலும் அதில் பலன் இருக்குமா என்பதை நிச்சயமாக கூற முடியாது.
மேமோகிராபி பரிசோதனை சிறப்பானதாக இருந்தாலும், இந்தியாவில் உள்ள பல மையங்களில் மேமோகிராபிக் வசதி மற்றும் துல்லியமான விளக்கத்திற்கான பயிற்சி பெற்ற நிபுணர்கள் இல்லை. மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டறிய 3 முக்கிய விஷயங்கள் தேவை. அவை, இந்தியப் பெண்களிடையே பொதுவாகக் காணப்படும் அடர்த்தியான மார்பக திசுக்களில் மறைந்திருக்கும் புற்றுநோய்களைக் கண்டறியக்கூடிய 3டி டிஜிட்டல் மேமோகிராபி போன்ற மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளது.
மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால், அதற்கு உடனடியாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். ஆரம்ப கட்ட மார்பகப் புற்றுநோய்களுக்கு பெரும்பாலும் குறைவான ஊடுருவும் அறுவை சிகிச்சைகள், குறுகிய கால கீமோதெரபி மற்றும் பல சந்தர்ப்பங்களில், முலையழற்சிக்கு பதிலாக மார்பகப் பாதுகாப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. இவ்வாறு ஆரம்ப நிலையில் கண்டறியப்படும்போது உயிர் பிழைப்பு விகிதம் 90 சதவீதத்தைவிட அதிகமாக இருக்கும். இந்தியாவில் மார்பக புற்று நோய் பரவலை தடுக்க பன்முக நடவடிக்கைகள் அவசியம் ஆகும்.
பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் பெண்கள் இடம்பெறும் குழுக்களில் மார்பக சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மார்பக புற்றுநோய் வயதான பெண்களை மட்டுமே பாதிக்கிறது அல்லது வலியற்ற கட்டி பாதிப்பில்லாதது போன்ற கட்டுக்கதைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.
அறுவை சிகிச்சை அல்லது கீமோதெரப்பியுடன் சிகிச்சை முடிந்துவிடுவதில்லை. உயிர்வாழ்வு, உணர்ச்சி நல்வாழ்வு, உடல் தோற்றம் மற்றும் இயல்பு நிலைக்குத் திரும்புதல் ஆகியவையும் மிகவும் முக்கியம். ஆரம்பகால கண்டறிதல், சிகிச்சையின்போதும் அதற்குப் பிறகும், பெண்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்க அனுமதிக்கிறது. இது மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை, நீண்டகால ஹார்மோன் சிகிச்சை மற்றும் தீவிரமான கதிர்வீச்சுக்கான தேவையைக் குறைக்கிறது. மிக முக்கியமாக, இது பெண்கள் தங்கள் நம்பிக்கையையும், கண்ணியத்தையும் மீட்டெடுக்க உதவுகிறது. மார்பக ஆரோக்கியம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் இதை அதிகரிக்காமல் நம்மால் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் அஸ்மி சவுந்தர்யா கூறியதாவது:
புற்றுநோய் வருவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை, குடும்ப பின்னணி, மரபணு பிரச்னைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவற்றின் காரணமாக ஒருவர் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கு சில காலம் ஆகும். வயது அதிகரிக்கும் போது, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் மேற்கண்ட காரணங்கள் இல்லாதவர்களுக்கும் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கும், மற்றொருவருக்கு புற்றுநோய் வருவதற்கும் என்ன காரணம் என்பது குறித்தும் தற்போது வரை தெளிவாகத் தெரியவில்லை.
எனவே, புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அதைத் தடுப்பதற்கு ஆரம்பகால நோய் கண்டறிதல் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துவதும், புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையைக் காட்டுவதுமே அதற்கு சிறந்த வழிமுறையாகும். கடந்த 2022ம் ஆண்டில் இந்தியாவில் புதிய புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 14,61,427 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025ம் ஆண்டில் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நுரையீரல் மற்றும் வாய்வழி குழி புற்றுநோய் ஆண்களில் மிகவும் பொதுவான புற்றுநோயாக உள்ளது. அதேசமயம் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பெண்களில் பொதுவான ஒன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை 25 வயதில் பேப் ஸ்மியர் மூலம் தொடங்கப்பட வேண்டும். வருடாந்திர மேமோகிராம் மூலம் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையை 40 வயதில் இருந்து செய்து கொள்ளலாம். பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பரிசோதனை 45 வயதிலும், புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையும் செய்வது மிகவும் நல்லது. இதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வழக்கமான பரிசோதனை திட்டங்களில் சேரும்போது, அதில் தேவைப்படும் நபர்கள் மருத்துவ நிபுணர்களை சந்தித்து அதுகுறித்து ஆலோசனைகளை பெறலாம்.
பரிசோதனை அவசியம்
பரிசோதனை மூலம் எந்த அறிகுறிகளும் தோன்றுவதற்கு முன்பே புற்றுநோய்களைக் கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்டால் அதற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் வாய்வழி குழி புற்றுநோய் வராமல் தடுக்க குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.
என்ன செய்யலாம்
முதன்மையான தடுப்பு என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளான கார்சினோஜென்களுக்கு ஆளாகாமல் தடுப்பதாகும். மேலும், புற்றுநோய் ஏற்படுவதை குறைப்பதற்கான ஒரே வழி அதை தடுப்பது மட்டுமே ஆகும். புற்றுநோய் தடுப்பு என்பது புற்றுநோய் அபாயத்தை குறைப்பதற்காக எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகும். அனைத்து புற்றுநோய்களையும் தடுக்க முடியாது. ஆனால், ஆபத்தைக் குறைக்க நாம் சில விஷயங்களை செய்யலாம், அதாவது, மது அருந்துதல் மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துதல், உடல் எடையை ஆரோக்கியமாக பராமரித்தல், ஆரோக்கியமான உணவு, வீட்டிலோ அல்லது வேலையிலோ பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்பாட்டை தவிர்ப்பது, ஹெபடைடிஸ் பி மற்றும் எச்பிவிக்கான தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடுதல், அதிக அளவில் வெயிலில் சுற்றுவதை தவிர்ப்பது போன்றவை புற்று நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகும்.