காலை உணவுத் திட்டத்தை செலவு என நான் சொல்ல மாட்டேன்.. இது ஒரு சிறப்பான சமூக முதலீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
சென்னை: காலை உணவு திட்டம் செலவு அல்ல; தமிழ்ச் சமுதாயத்துக்கான முதலீடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடைபெறும் விழாவில், சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றனர்.
காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; இன்றைய நாள் என் மனதுக்கு நிறைவான நாள். மகிழ்ச்சிக்குரிய நாள். குழந்தைகளுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டதால் குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. பள்ளிகளில் கல்வி அறிவுடன் வயிற்று பசியையும் போக்கவேண்டும். 20 லட்சம் மாணவ, மாணவியர் காலை உணவு சாப்பிடுவதைவிட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.
மாணவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பணியாற்றுவதுதான் இத்திட்டத்தின் உண்மையான வளர்ச்சி. காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது. குழந்தைகளின் அறிவு வளர்கிறது; பெற்றோர்களின் மனதில் மகிழ்ச்சி மலர்கிறது என்றார். காலை உணவு திட்டம் செலவு அல்ல; தமிழ்ச் சமுதாயத்துக்கான முதலீடு. ஆண்டுக்கு ரூ.600 கோடி மதிப்பில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் வாடிய முகங்களைவிட சுறுசுறுப்பான முகங்களைத்தான் இனி பார்க்கவேண்டும்.
காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரித்துள்ளது. கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட காலை உணவுத் திட்டம் பின்பற்றப்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நாடுகள் முன்வந்துள்ளதுதான் நம் அரசின் சாதனை. எல்லா துறைகளிலும் தமிழ்நாட்டை நம்பர் 1 ஆக்குவதே எனது இலக்கு. எங்களுக்கு எப்போதும் நீங்கள்தான்; உங்களுக்காகதான் நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.