பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டு சிறை
பிரேசிலியா: கடந்த 2022ம் ஆண்டு பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த ஜெயிர் போல்சனாரோ, தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்காக ராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சதித்திட்டத்தின் உச்சகட்டமாக, கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி, அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பிரேசிலியா நகரில் உள்ள அரசு கட்டிடங்களுக்குள் புகுந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், சதித்திட்டத்தில், அரசியல் எதிரிகள் மற்றும் மூத்த நீதிபதிகளை படுகொலை செய்யவும் திட்டமிடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, முன்னாள் அதிபர் போல்சனாரோ குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 27 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. வீட்டுக் காவலில் உள்ள போல்சனாரோ இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.