மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவால் மகள் சாவு; பெங்களூரு ஆஸ்பத்திரி முதல் சுடுகாடு வரை லஞ்சம்: ஓய்வு பெற்ற அதிகாரியின் சமூகவலைதள பதிவால் பரபரப்பு
பெங்களூரு: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் ஓய்வுபெற்ற தலைமை நிர்வாக அதிகாரி சிவகுமார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், எனது ஒரே மகள் அக்ஷயா (34), சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக இறந்துவிட்டார். அந்த நேரத்தில், உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. எனது மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் லஞ்சம் கேட்டனர்.
பெல்லந்தூர் காவல் நிலையம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய லஞ்சம் கேட்டது. உடலை தகனம் செய்ய சுடுகாட்டுக்குச் சென்றபோது, அங்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. இறப்புச் சான்றிதழைப் பெற மாநகராட்சி அதிகாரிகளும் லஞ்சம் கேட்டனர். மகளை இழந்த தந்தையின் மீது யாருக்கும் எந்த அனுதாபமும் இல்லை. கொடுக்க என்னிடம் பணம் இருந்தது. ஆனால் ஏழைகள் என்ன செய்வார்கள்?.
தனது மகளின் மரணத்தால் வேதனையடைந்த போதிலும், பெங்களூருவில் ஆம்புலன்ஸ், பெல்லந்தூர் காவல் நிலைய ஊழியர்கள், இறப்புச் சான்றிதழைப் பெற மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தகனம் உட்பட ஒவ்வொரு கட்டத்திலும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது என்று விளக்கி இருந்தார். இந்த இதயத்தை உடைக்கும் பதிவு லஞ்சம் குறித்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
* பிஎஸ்ஐ, கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்
ஓய்வு பெற்ற அதிகாரி சிவகுமாரின் பதிவு வைரலானதால், பெல்லந்தூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் மற்றும் காவலர் கோரக்நாத் ஆகியோரை ஒயிட்பீல்ட இணை காவல் ஆணையர் கே. பரசுராமர் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.