பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை: திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை இந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். கொடியேற்றத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாட வீதிகளில் வலம் வந்தார். இதைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கருட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பிரம்மோற்சவத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில் முதல் நாளான நேற்று, இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமியின் பெரிய சேஷ வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. மாட வீதிகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டனர். அப்போது மாட வீதிகளில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து திருப்பதி பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. www.tnstc.in-ல் சிறப்பு பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.